ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு,  அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் போது அந்நாடு பல்வேறு விதமான சிக்கல்களையும் பிரச்சினைகளையும்  எதிர்கொள்ள வேண்டியேற்படும் அதனால் ஏற்படும் விளைவுகளை குறுகிய கால விளைவு, நீண்டகால விளைவு என இருவகைப்படுத்தலாம்

இன்று நம் நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம், பெற்றோலிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் உள்ள சிரமம், அத்தியாவசிய பொருட்கள், சேவைகளை பெற்றுக் கொள்வதில் போட்டியும் கட்டுப்பாடுகளும் நிலவுதல், அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற தன்மை என்பவற்றை குறுகியகால விளைவுகளாகக் குறிப்பிடலாம்.

இவ்வாறான பொருளாதார நெருக்கடி நீடிக்கும் பொழுது நாம் பல நீண்டகால விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்.

இவ்வாறாக எதிர்நோக்கயிருக்கின்ற விளைவுகளுள் பிரதானமாக ஆரோக்கிய பிரச்சினைகளைக் குறிப்பிடலாம்.

இவ்வாறான பிரச்சினைகளுள் போசணைக் குறைபாடு இலங்கை மக்களுக்கு பாரிய தாக்கத்தை செலுத்தக் கூடும். போசணைக் குறைபாடும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தவிர்ப்பதற்கான அனைத்து உத்திகளைப் பற்றியும் இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்க வேண்டும்.

போசனை குறைபாடுகளினால் கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுவர்கள் போன்ற பிரிவினரில் ஏற்படும் தாக்கங்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதோடு அவற்றுள் பல விளைவுகள் மீள முடியாதவை.

 இலங்கையில் வறிய குடும்பங்களில் போசணைக் குறைபாடுகள் தொடர்ச்சியான ஒரு பிரச்சினையாக இருந்து வந்தபோதிலும் இன்று நாட்டில் நிலவியுள்ள நிதி நெருக்கடி பல அத்தியாவசிய உணவுப் பொருட்களில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. ஒரு நாட்டின் அடிப்படை உணவுப் பொருட்களில் தட்டுப்பாடும், விலை ஏற்றமும் தொடர்ச்சியாக அதிகரிக்கும் போது பொதுமக்கள் உட்கொள்ளும் உணவுகளின் அளவிலும் தரத்திலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

நாம் உட்கொள்ளும் உணவின் பிரதான தொழிற்பாடுகளாக உடல் இயக்கத்துக்கு  தேவையான சக்தியை வழங்கள், உடல் வளர்ச்சியை ஏற்படுத்துதல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதனூடாக உடலை நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளல், வளரும் சிறுவர்களின் மூளை விருத்தியை தூண்டுதல் போன்ற இன்னோரன்ன நோக்கங்களை குறிப்பிடலாம்.

நாம் உண்ணும் உணவில் உள்ள பிரதான போசனை கூறுகளான காபோவைதரேற்று, புரதம், இலிப்பிட்டு, கனிம உப்புக்கள், விட்டமின்கள் ஒவ்வொன்றும் வேறுபட்ட தொழில்களை ஆற்றுவதன் மூலம் உடலுக்கு நன்மை பயக்கின்றன. இதனாலேயே நாம் உட்கொள்ளும் உணவும் மேற்படி போசணைக் கூறுகள் அனைத்தும் உள்ளடங்கிய கலப்பு உணவாக அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறோம்.  

ஆனால் இன்று நம் நாட்டில் நிலவுகின்ற நெருக்கடி இன்னும் தொடரும் போது,  மேற்படி உணவு உட்கொள்ளலுக்கான நோக்கங்களை மறந்து,  உயிர் பிழைப்பதற்கு ஏதாவது கிடைப்பதை சாப்பிட்டு கொள்வோம் என்ற நிலைமைக்கு நம்மை ஆளாக்கலாம்.

இக் கொடூரமான நிலைமையிலிருந்து இறைவன் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.  இன்று உலகில் பல நாடுகளில் போசணைக் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டு,  அல்லலுறும் மக்களை தினமும் சமூக வலைத்தளங்களின் ஊடாக காண்கின்றோம்.

இவ்வாறான நிலைமைகளிலிருந்து  எவ்வாறு நாம் நம்மையும்,  நம் சந்ததியினரையும் பாதுகாக்க போகின்றோம் என்று ஒவ்வொரு படித்த,  பாமர இலங்கை குடிமகனும் தெளிவூட்டப் பட வேண்டும்.


இலங்கை தாய் நாடு அனைத்து வித வளங்களும் பொதிந்த விவசாய  நாடு.  இலங்கையிலுள்ள நில,  நீர்,  காலநிலை வளங்கள் எமக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்துக் கொள்வதற்கு மிகவும் உறுதுணையாக காணப்படுகின்றன. எமக்குத் தேவையான காய்கறிகளை ஏன் நாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடாது?  என்ற வினா எழுப்பப் படும் போது அதற்குப் பலரும் பல காரணங்களை குறிப்பிடலாம்.

இடப்பற்றாக்குறை,  நேரப் பற்றாக்குறை என்பன இவ்வாறு முன்மொழியப்படும் காரணங்களும் பிரதானமானவையாக  கருதலாம்.  நகர்ப்புற பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு இடப் பிரச்சினை கருதப்பட வேண்டிய பிரச்சினையே.  இருப்பினும் வீட்டு மொட்டை மாடியிலும் கூட வீட்டுத் தோட்டத்தை சிறப்பாக செய்வதற்கு பல நவீன உத்திகள் காணப்படுகின்றன.  நம் நேரத்தை நாம் திட்டமிட்டு செலவழித்தால் வீட்டுத் தோட்டச் செய்கைக்கான நேரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

போதுமான இடவசதி,  நேர வசதி மற்றும் ஏனைய வளங்கள் அனைத்தையும் வைத்துக்கொண்டு,  நாட்டுத் தலைவர்களை மட்டும் குறைகூறிக் கொண்டு  சமூக வலைத்தளங்களில் எமது நேரத்தை  வீணடித்து கொண்டு இருப்பவர்களே நீங்கள் முயற்சித்தால்  இலங்கை பிரஜையாக நாட்டுக்கு பாரிய சேவையை செய்யலாம்.
 
வீட்டுத்தோட்டம் மட்டுமன்றி கோழி,  மற்றும் கால்நடை உற்பத்திகளை முடியுமானவர்கள் மிகச்சிறிய அளவில் ஆரம்பித்தால் தனக்கும் தன் குடும்பத்துக்கும் தேவையான இறைச்சி,  முட்டை,  பாற்பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.  இப்போசணை குறைபாட்டை தவிர்த்துக்கொள்ள நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய இன்னும் பல விடயங்கள் காணப்படுகின்றன.  

தற்போதுள்ள சூழ்நிலையில் மேலதிக செலவுகளை தவிர்த்து குறைந்த செலவில் எவ்வாறு போசனை மிகுந்த ஆகாரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்பதை சிந்திக்க வேண்டும். 

எமது நாட்டில் மலிவாக கிடைக்கக்கூடிய அகத்தி,  முருங்கை,  வல்லாரை,  சாதாவாரி,  முடக்கத்தான் என்பன அதிக போசனை  பெறுமானங்களைக் கொண்ட,  மலிவாகக் கிடைக்கக்கூடிய விட்டமின்,  கனியுப்பு வழங்கிகள் இவற்றை நம் சூழலில் அதிகமாக வளர்க்க வேண்டும்.

 காபோவைதரேற்றைப் பெற்றுக்கொள்வதற்காக நட முடியுமான கிழங்கு வகைகளை உருவாக்க வேண்டும். வற்றாளை,  மரவள்ளி போன்றவற்றை விளைவிப்பதால் அவற்றை பிரதான ஆகாரங்களாகவும் பயன்படுத்த முடியும்.

பப்பாசி,  வாழை போன்ற  இலகுவில் கனி தரக்கூடிய பழங்களை வீட்டிலேயே உருவாக்க வேண்டும்.  ஒரு அப்பிள் பழத்தை விட நம் நாட்டில் விளையும் கொய்யாப்பழத்தில் அதிக போசனை பெறுமானங்கள் காணப்படுகின்றன. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் தோடம் பழங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதை விட நம் நாட்டில் உள்ள எலுமிச்சை,  புளி தோடை,  போன்றவற்றின் விளைச்சலை ஏன் அதிகரிக்க முடியாது?

அவரை இனத் தாவரங்கள்,  அதிக அளவில் புரதங்களை கொண்டுள்ளதோடு இலகுவாக மிகக் குறுகிய காலத்தில்  விளைவிக்க முடியுமானவை.  அவற்றை எமது சூழலிலிருந்து இலகுவாகப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
 

உணவின் விளைச்சலை எவ்வாறு அதிகரிக்க வேண்டுமோ அதேபோன்று உணவு வீண் விரயத்தையும் முடியுமானவரை  குறைக்க வேண்டும்.  

உதாரணமாக சுரக்காய் வட்டக்காய்,  பலா,  போன்றவற்றின் விதைகளை வீசி எறியாமல் காயவைத்து சேமித்துக் கொள்ளலாம்.  அத்துடன் கரையோர பிரதேசங்களில் மலிவாக கிடைக்கும் பனம்பழம்,  உயர்ந்த போசணைப் பெறுமாணங்களைக் கொண்டது.  அவை மலிவாக கிடைக்கும் காலங்களில் அவற்றை புனாட்டு போன்ற வேறு வடிவங்களுக்கு மாற்றி  பிற்கால தேவைகளுக்காக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

மலையகப் பிரதேசங்களில் மலிவாகக் கிடைக்கும் காட்டு நெல்லி,   பூ நெல்லி, லாவுலுக்காய்,  யானைக் கொய்யா,  போன்றவைகளில் அதிக மருத்துவ குணங்கள் காணப்படுவதோடு பல போசணைக் கூறுகளும் செறிவாக காணப்படுகின்றன.  எனவே இவற்றின் போசனைப் பெறுமானங்களை உணர்ந்து,  அவற்றை வீண்விரயம் செய்யாமல் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் உட்கொள்ளலாம்.

இதுபோன்று ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பிரத்தியேகமாக விளைச்சலைத் தரக்கூடிய உணவு வகைகளை சேமித்து வைத்துக் கொள்வோம்.
 

இவ்வாறு மேற்படி கலந்துரையாடப்பட்ட  விடயங்கள் மட்டுமல்லாமல்,  நாம் நமது நாட்டையும் எதிர்கால சந்ததிகளையும் பாதுகாக்க எவ்வகையான தியாகங்களையும்,  அர்ப்பணிப்புக்களையும்,  செய்ய முடியுமென சிந்தித்து ஒவ்வொருவரும் செயற்படுவோம். 

தனிமனித மாற்றம் சமூக மாற்றத்தை உருவாக்கும்.எனவே அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் போசணைக் குறைபாட்டு  பிரச்சினைகளை முடிந்தவரை தவிர்த்துக் கொள்வோம்.

Dr. றிஸ்மியா ரபீக் - தெல்தோட்டை